செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீர்வும் தரும்; சிக்கலாகவும் மாறும் :உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீர்வும் தரும்; சிக்கலாகவும் மாறும் :உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு
ADDED : நவ 10, 2024 12:38 AM

சென்னை: ''செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில், அதை பயன்படுத்துவோர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்; மாறாக, அதன் கட்டுப்பாட்டில் சென்று விடக்கூடாது,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி பேசினார்.
அஸ்பயர் சுவாமிநாதன் மற்றும் வழக்கறிஞர் அனிதா தாமஸ் இணைந்து எழுதியுள்ள, 'ஜெனரேட்டிவ் ஏ.ஐ., இன் தி கோர்ட் ரூம்' என்ற நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி நுாலை வெளியிட, தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் டேவிதார் பெற்றுக் கொண்டார்.
பின், நீதிபதி பி.பி.பாலாஜி பேசியதாவது:
வரும் நாட்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நீதித்துறையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.
நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான், செயல்பாடுகள் வெளிப்படுகின்றன. அவை நமக்கு பல்வேறு சிக்கல்களில் இருந்து தீர்வுகளை தருகிறது; பலவற்றுக்கு சிக்கலாகவும் மாறுகிறது.
இருப்பினும், அவற்றை முழுதுமாக நம்பி இருந்து விடக்கூடாது. வழக்கறிஞர்கள் தங்களுக்கு தேவையான ஆராய்ச்சி உத்திகளை பயன்படுத்த, செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.
அதே சமயம், அது தரக்கூடிய தரவுகள் சரியானதா என்பதை, நீங்கள் தான் முடிவு செய்ய முடியும்.
இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் என, பல துறைகளில் பயன்படுகிறது.
இதை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவது இன்றியமையாதது. 'டேட்டா ஆட்டோமேஷன்' முறையும் சிறப்பானதாக மாறி வருகிறது. நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விபரங்களை, இதன் வாயிலாக எளிதில் அறிய முடிகிறது.
என்ன தான் தொழில் நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும், சிலவற்றில் அவை தரும் பதில்கள் அல்லது ஆலோசனைகள் நம்மை யோசிக்க வைக்கக்கூடியதாக உள்ளன.
ஒரு வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்க, உள்ளூர் மொழி தெரியாதவர்கள் கூட, இதன் வாயிலாக எளிதில் மொழிப்பெயர்ப்பு செய்ய முடிகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவதை, உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்; அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் என்றும் இருந்து விடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மும்பை விஜய்பூமி பல்கலை இணை துணை வேந்தர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.