ADDED : ஜன 08, 2024 06:08 AM

சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, 'கலைஞர் 100' என்ற நிகழ்ச்சியை, சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், தமிழ் திரைத்துறையினர் நேற்று முன்தினம் நடத்தினர்.
இதில், நடிகர்கள் ரஜினி, கமல், வடிவேலு, நடிகையர் நயன்தாரா, கீர்த்திசுரேஷ், லட்சுமி மேனன், இயக்குனர்கள் டி.ராஜேந்தர், வெற்றிமாறன், அமீர், பார்த்திபன், பி.வாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு நாடகம் அரங்கேற்றப்பட்டது. மேலும், நடிகர், நடிகையரின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவை உள்பட பெப்சி அமைப்பின் கீழ் வரும், 24 தொழிற் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, மிகப் பிரமாண்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, அன்றைய தினம் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இடம் மற்றும் தேதி மாற்றத்தினாலும், சமீபத்தில் நடந்த ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அனுபவங்களாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், இதில் பங்கேற்கும் ஆர்வம் மட்டுப்பட்டது.
'பெப்சி' அமைப்பில் மட்டும் ஒரு லட்சம் உறுப்பினர் இருக்கும் நிலையில், அவர்களின் குடும்பத்தினர், முன்னணி நடிகர்களின் ரசிகர்கள், ஆளுங்கட்சியினர் பங்கேற்றாலே, அவர்களை சமாளிப்பது பெரும் சிரமம் என, கணக்குப் போட்டிருந்தனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.
ஒளிபரப்பு உரிமையை ஆளுங்கட்சி சேனல் பெற்றிருந்த நிலையில், விழா நிகழ்ச்சிகள் வெளியில் கசிந்து விடாமல் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பிளாட்டினம், டைமன்ட், கோல்டு, சில்வர் என, நான்கு வகை டிக்கெட் வழங்கப்பட்டு, அதற்கேற்ப இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், சினிமா நிகழ்ச்சிகளுக்கு காட்டும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இதற்கு ஆர்வம் இல்லாததாலும், போதிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும், டிக்கெட் கெடுபிடிகளாலும், போடப்பட்டிருந்த இருக்கைகளில், பாதிக்கும் மேலாக நிரம்பவில்லை.
வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கும், 1 கிலோ மீட்டர் அளவு துாரம் இருந்தது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் மட்டும் பேட்டரி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை.
அதேபோல, கலை நிகழ்ச்சிகளுக்கு இடையேயான இடைவெளியும், மிக அதிகமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால், வந்திருந்த கூட்டமும் பாதியில் கரையத் துவங்கியது. மாலையில் துவங்கிய நிகழ்ச்சி, சரியான திட்டமிடல் இல்லாததால், நள்ளிரவு வரை தொடர்ந்தது.
இசை வெளியீட்டுக்கு ஒரு படக்குழு முன்னெடுக் கும் ஆர்வம், அக்கறையை, ஒட்டு மொத்த திரைத்துறையும் சேர்ந்து எடுக்க முடியாதது, பல்வேறு தரப்பிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.