ADDED : ஜூலை 02, 2025 12:39 AM
சென்னை:நாட்டுக்கோழி வளர்ப்பில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க, 50 சதவீத மானியத்தில், சிறிய அளவிலான, 'அஸீல்' இன நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது.
இத்திட்டம், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், சென்னை, நீலகிரி தவிர்த்து பிற மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. நாட்டுக்கோழி வளர்ப்பில், ஆர்வம் உள்ள விவசாயிகள், இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுதும் 360 பயனாளிகளுக்கு, 6 கோடி ரூபாய் மதிப்பில், தலா 250 எண்ணிக்கையிலான நான்கு வார வயதுடைய அஸீல் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படும்.
இந்த குஞ்சுகள், ஓசூர் கோழிப்பண்ணையில் இருந்து வழங்கப்படும். விண்ணப்பதாரர், சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
கோழி கொட்டகை அமைக்க, குடியிருப்புகளில் இருந்து விலகியுள்ள பகுதியில், குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க தேவையான மொத்த செலவில், 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக, ஒரு லட்சத்து 65,625 ரூபாய் வரை, மாநில அரசால் வழங்கப்படும்.
பழங்குடி இனத்தவர், விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கையர், மாற்றுத்திறானாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தவராக இருக்கக்கூடாது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கோழிப்பண்ணையை பராமரிப்பவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரை அணுகி, உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.