UPDATED : ஜூன் 17, 2025 06:19 AM
ADDED : ஜூன் 17, 2025 06:18 AM

சென்னை : நாட்டின் பெரும் பகுதியை ஆண்டு, பேரரசர் என புகழப்பட்ட அசோகரின் உருவம் பொறித்த கல்வெட்டு, கர்நாடகாவின் கனகனஹள்ளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பீஹார் மாநிலத்தின் பாடலிபுத்திரம் என்ற பாட்னாவை தலைநகராக கொண்டு, பொ.ஆ.மு., 3ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்தவர் மவுரிய மன்னர் அசோகர். இவர் பெரும் போர்களின் வாயிலாக, தற்போதைய ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியாவின் கர்நாடகா வரை தன் ஆட்சியை விரிவுபடுத்தினார்.
|  | 
மேலும், நாடு முழுதும் புத்த ஸ்துாபிகளையும் உருவாக்கினார்.
அசோகர் காலத்தில், தமிழகத்தில் சங்ககால மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள் வலிமையுடன் ஆண்டு வந்தனர். அப்போது இங்கு, சமண சமயம் தழைத்தோங்கி இருந்தது.
அதனால், தமிழகத்தை தவிர மற்ற இடங்களை ஆண்டதாக, தன் கல்வெட்டில் குறிப்பிட்டு உள்ளார்.
அதாவது, குஜராத் மாநிலம் கத்தியவாரில் உள்ள கிர்னார் இரண்டாம் பெரும்பாறை கல்வெட்டில், தேவனுக்கு பிரியமானவரான கவுதமரின் கோட்பாட்டின்படி, தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விலங்குகள், மனிதர்களுக்கான மருத்துவ சாலைகளை அமைக்கவும், மருத்துவ மூலிகைகளை வளர்க்கவும் உத்தரவிட்ட செய்தி உள்ளது.
அதில், சேர, சோழ, பாண்டிய, சத்யபுத்ர எனும் பிறர் ஆண்ட நாடுகளிலும், புத்த மத கோட்பாடுகளை பரப்ப நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இதில், சத்யபுத்ர என்பவர்கள், தமிழகத்தின் சிறந்த வீரர்களாகவும், வள்ளல்களாகவும் இருந்த சிற்றரசர்களான அதியமான் பரம்பரையை குறிக்கும்.
அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில், பொ.ஆ.மு., இரண்டாம் நுாற்றாண்டில் ஆட்சி செய்த சாதவாகனர்கள், கனகனஹள்ளி என்ற இடத்தில், ஸ்துாபியை ஏற்படுத்தியுள்ளனர்.
அதில், பல கல்வெட்டுகள், மத்திய தொல்லியல் துறையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போதைய கள ஆய்வில், அசோகர் உருவம் பொறித்த கல்வெட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் மைசூரு கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது:
கனகனஹள்ளியில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ததில், ஒரு கல்வெட்டில், தன் பணிப்பெண்கள் சூழ, வலதுபுறம் தன் மகள் சங்கமித்திரையுடன் அசோகர், குடையின் கீழ் நிற்பது போல் உள்ளது. அதன்கீழ் பிராகிருத மொழியில், 'ராயி அசோகா' என பொறிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மற்றொரு கல்வெட்டில், போதி மரத்தையும், புத்த பாதத்தையும், தன் குருவின் வழிகாட்டுதலுடன் வணங்குவது போன்ற சிற்பம் உள்ளது. அதன் கீழும், 'ராயி அசோகா' என, பிராகிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

