'ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப்' சென்னையில் ஆக., 3ல் துவக்கம்
'ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப்' சென்னையில் ஆக., 3ல் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 12:20 AM

சென்னை:'ஆசிய சர்பிங்' போட்டி முதல் முறையாக, சென்னையில் ஆகஸ்ட், 3ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய சர்பிங் கூட்டமைப்புடன், தமிழ்நாடு சர்பிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, நான்காவது, 'ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் 2025' எனப்படும், கடல் சார் சர்பிங் போட்டியை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், ஆகஸ்ட், 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்துகின்றன.
இதில், இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா, கொரியா, இலங்கை, சவுதி அரேபியா, தாய்லாந்து உட்பட, 20 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில், தமிழக வீரர், வீராங்கனையர், எட்டு பேர் இடம் பெற்றுள்ளனர்.
இப்போட்டி குறித்து துணை முதல்வர் உதயநிதி கூறுகையில், ''தமிழகத்தில் அதிக அளவில், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆசிய சர்பிங் போட்டியை, இந்தியாவில் நடத்துவது இதுவே முதல் முறை.
அதுவும், சென்னையில் நடப்பது சிறப்பு. இப்போட்டிக்காக தமிழக அரசு, 3.30 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது,'' என்றார்.