மூட்டுவலி வராமல் இருக்க வழி என்ன.
--எஸ்.நாகராஜன், மதுரை
இளம் வயதிலிருந்தே பால், பால் பொருள்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள புரதச்சத்து மூட்டுகளில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதால், அங்குள்ள குருத்தெலும்பு தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கப்படுகிறது.
தினமும் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும். சூரிய ஒளி படுவதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் வைட்டமின் - டி தயாராகிறது. இது எலும்புக்கு பலம் தரக்கூடியது. சிறு வயதிலிருந்தே நடை, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். மூட்டுத் தேய்மானம் ஆவது தள்ளிப்போகும்.
நடக்கும்போது நம் உடல் எடையைப்போல இரண்டு மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது. உடல் எடை அதிகரித்தால், மூட்டுக்கு அதிகப்படியான வேலை உண்டாகிறது. இதனால் மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. எனவே உடல் எடை சரியாக இருந்தால் மட்டுமே மூட்டு வலியைத் தவிர்க்க முடியும். முழங்கால் மூட்டுக்கு வலிமை தருகின்ற யோகாசனங்களை முறைப்படி செய்துவந்தால் மூட்டுவலியைத் தள்ளிப்போட முடியும்.
- -டாக்டர் கு.கணேசன்
பொதுநல மருத்துவர்ராஜபாளையம்
சிறுநீரக கற்கள் தொடர்பாக அறுவை சிகிச்சை செய்துள்ளேன். சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்
--சி.விஜயன், நத்தம்
சிறுநீர் வரும்போது சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்க கூடாது.போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் உடலில் உள்ள கழிவுகள் சிறுநீரகத்தில் தேங்கி கற்களாக உருவாகிறது. தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், அன்னாசி பழம், எலுமிச்சை சாறு, பழங்கள், நீர் சத்துகள் நிறைந்த காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, நுங்கு, கேரட், வாழைப்பழங்கள் சாப்பிடலாம். அதிக அளவு உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கால்சியம், ஆன்டாசிட் மருந்துகளை குறைத்து கொண்டால் கற்கள் தோன்றும் பிரச்னை இருக்காது.
---டாக்டர் எஸ்.ராஜாஓய்வு பெற்ற மருத்துவர், நத்தம்
குழந்தைகளுக்கு விழுந்த பல் முளைக்குமா
- த.லலிதா குமாரி, கூடலுார்
குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைப்பதற்கான காலக்கட்டம் சுமார் 6 வயது முதல் 12 வயது வரை. இந்த நேரம் குழந்தையின் தாடைகள் விரிவடைய துவங்கி நிரந்தர பற்களுக்கான இடத்தினை உறுதி செய்கிறது. தாடையின் வளர்ச்சியும் பற்களின் அளவும் பெற்றோர் மட்டுமல்லாது பாரம்பரிய ஜீன்களையும் பொறுத்து அமைவதால் சில குழந்தைகளுக்கு தாடைகள் சிறியதாகவும் நிரந்தர பற்கள் பெரியதாகவும் அமையப்பெறும். அவ்வாறு அமையும் பொழுது கீழிருந்து வரும் நிரந்தர பற்கள் மேல் உள்ள பால் பற்களை உந்தி தள்ள இயலாமல் தாடையின் உட்புறமோ அல்லது தாடையின் வெளிப்புறமோ முளைத்து வரும். இவ்வாறு நடைபெறுவது தாடைக்கும் பற்களுக்கும் உள்ள வளர்ச்சியின் வித்தியாசமே ஆகும். 6 வயது முதல் பல் மருத்துவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை அணுகி குழந்தையின் பல் மற்றும் தாடை வளர்ச்சியில் வித்தியாசம் இருப்பின் அவர்களின் அறிவுறுத்தல் படி வேண்டியவற்றை செய்து கொள்வது அவசியம்.
- -டாக்டர் கணநாதன்அரசு பல் மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூடலுார்
உடல் பருமனால் பாதிக்கப்பட்டு உள்ளேன். இதற்கான தீர்வு என்ன.
-- டி.வளர்மதி, ராமநாதபுரம்
திருமணத்திற்கு பின் பெண்கள் உடல் உழைப்பு இல்லாததால் பருமனாகி உடல் எடை கூடுகிறது. தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கார்போ ைஹட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரித்தால் சர்க்கரை, ரத்த கொதிப்பு, மூட்டு வலியால் பாதிக்கப்படுவார்கள். இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உணவுகளை சரியான நேரத்தில் உண்ண வேண்டும்.
- ஆர்.கண்ணகிஅறுவை சிகிச்சை நிபுணர்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
பல் அரிப்பை எவ்வாறு சரி செய்வது
- -எஸ்.அபி, சிவகங்கை
பல் அரிப்பு என்பது பல்லில் ஏற்படும் சிறிய துளை. நாளைடைவில் இது பெரியதாகவும் ஆழமாகவும் மாறும். இனிப்பு சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பதே பல் அரிப்பிற்கு மூல காரணம். இனிப்பு பொருளுடன், வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா செயல்பட்டு அமிலத்தைச் சுரக்கச் செய்து விடும். இந்த அமிலம் பற்களின் வெளிப்பூச்சு எனாமலை அழிக்கத் தொடங்கும். இதன் அடுத்தக்கட்ட நிலையாகப் பற்கள் வீணாகி விடும். பல் அரிப்பை சரியாகக் கவனிக்காவிட்டால் அதிகமாகி மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளைடைவில் இது பற்களின் வேர்களையும் தாக்கும். பல்லை பழைய நிலைக்கு கொண்டுவர பல் சொத்தை நீக்கி பல் அடைத்தல் அல்லது வேர் சிகிச்சை செய்யலாம். கடுமையான சிதைவு இருக்கும் நிகழ்வுகளில் பல் மருத்துவர் பல்லை அகற்றிவிடக்கூடும். இரண்டு முறை பல் துலக்குவதன் மூலம் பல் சொத்தையை கட்டுப்படுத்தலாம்.
- -டாக்டர் ஜெ.விஜயபாரத்
பல் மருத்துவர்அரசு மருத்துவமனை
காளையார்கோவில்
கோடை உஷ்ணத்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிப்பது
- -எஸ்.தேவகி, சிவகங்கை
கர்ப்ப காலங்களில் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். உஷ்ணத்தால் நீர் கடுப்பு, உடலில் நீர்சத்து குறைதல், வியர்வை, சளி உள்ளிட்ட பிரச்னை வரும். இதற்காக பயப்பட தேவையில்லை. தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஐஸ் இன்றி பழச்சாறு, பழங்கள், தர்பூசணி, வெள்ளரி, மோர், இளநீர் அருந்த வேண்டும்.
- -டாக்டர் எம்.தென்றல்மகப்பேறு மருத்துவர்
அரசு மருத்துவமனை, சிவகங்கை
வளரும் குழந்தைகளின் எலும்பு திறன்பெற என்ன செய்ய வேண்டும்.
-- செல்வசத்யா, மல்லாங்கிணறு
முந்தைய தலைமுறையினருக்கும் தற்போதைய தலைமுறையினருக்கும் இடையே குழந்தை பருவத்தில் ஏராளமான வேறுபாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அலைபேசியை காண்பித்து வளர்ப்பதால், விளையாடி வளர வேண்டிய வயதில் ஒரே இடத்தில் அமர்ந்து விடுகிறார்கள்.
இதனால் உணவுகளை தவிர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரம் நன்றாக ஓடி, ஆடி விளையாட வேண்டும்.
சிறுவயதில் இருந்தே பால், முட்டை, கீரை உணவுகளை அதிக அளவில் கொடுப்பதால் குழந்தைகளின் எலும்புகள் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சியில் இருக்கும்.
- -டாக்டர் ஜெ. மகேஸ்வரன்
மூடநீக்கியல் துறைத் தலைவர்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விருதுநகர்