ADDED : நவ 20, 2025 01:08 AM
சென்னை: ''தமிழக கவர்னர் ரவி, முனைவர் பட்டம் பெற்றவர்களின் தரம் குறித்து சந்தேகப்படுவதை விட்டு விட்டு, அவர்களை சோதித்து முடிவு செய்ய வேண்டும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
சென்னையில், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், சிறந்த நுாலகர்களுக்கான, நல் நுாலகர் விருது வழங்கும் விழா, நேற்று நடந்தது. விருதுகளை வழங்கிய பின், அவர் அளித்த பேட்டி:
நான், தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். அதற்கான வாய்மொழித் தேர்வு, பொதுமக்கள், கல்வியாளர்கள் முன்னிலையில் நடந்தது.
நான், என் முனைவர் பட்டத்துக்காக, களத்தில் ஆய்வு செய்ததால்தான், அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்தது.
அதுபோல், முனைவர் பட்டம் பெறுவோரின் வாய்மொழித் தேர்வில் பங்கேற்று, அவர்களின் திறமையை, யார் வேண்டுமானாலும் சோதிக்கலாம். அவ்வாறுதான் தமிழகத்தில், தகுதியானோருக்கு முனைவர் எனும் பி.எச்டி., பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால், தமிழக கவர்னர் ரவி, 'முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு உரிய தகுதி இல்லை' என, குற்றம் சாட்டுகிறார். பொதுவாக, பள்ளிக் கல்வியிலோ, உயர் கல்வியிலோ, தமிழக மாணவர்கள் சாதித்தது குறித்து, தமிழக அரசு தெரிவித்தால், உடனே, கவர்னர் அதற்கு எதிராக ஒரு ஆய்வறிக்கை என்ற பெயரில் அறிக்கை விட்டு, அவதுாறு பரப்புகிறார்.
அதற்கு பதில், பி.எச்டி., பட்டம் பெறுவோரிடம், அவர்கள் பாடம் சார்ந்த கேள்விகளை கேட்டு தெளிவு பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

