மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூடுதல் ஆவணம் கேட்பது புதிதல்ல: முன்னாள் திட்ட இயக்குநர் தகவல்
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூடுதல் ஆவணம் கேட்பது புதிதல்ல: முன்னாள் திட்ட இயக்குநர் தகவல்
ADDED : நவ 27, 2025 12:37 AM

சென்னை: ''கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் திட்ட அறிக்கை அனுப்பி, மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்,'' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் ராமநாதன் வலியுறுத்தினார்.
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
மதுரையில், 11,360 கோடி ரூபாயில், திருமங்கலம் - ஒத்தக்கடை வரை, 31.93 கி.மீ., துாரம்; கோவையில், 10,740 கோடி ரூபாயில், 39 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தும் வகையில் விரிவான திட்ட அறிக்கையை, தமிழக அரசு தயாரித்தது.
அதை மத்திய அரசுக்கு அனுப்பி, ஒப்புதல் கோரியது. ஆனால், மக்கள்தொகை குறைவை காரணம் காட்டி, அந்த அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன், தமிழக அரசு தொடர் ஆலோசனை நடத்தி வருகிறது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் ராமநாதன் கூறியதாவது:
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, கூடுதல் ஆவணங்கள் கேட்டு, மத்திய அரசு திருப்பி அனுப்புவது புதியது அல்ல. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு முன், மூன்று, நான்கு முறை கூடுதல் ஆவணங்கள் கேட்கப்பட்டு உள்ளன.
கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில், மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ள கடிதத்தை ஆய்வு செய்து, அதற்கான ஆவணங்களை தயார்படுத்த வேண்டும். திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிய விவகாரத்தை கேள்வி கேட்கின்றனர் என, எடுத்துக் கொள்ள கூடாது.
நமக்கான தேவை இருக்கும்போது, மத்திய அரசு கேட்கும் கூடுதல் ஆவணங்களை, தமிழக அரசு தான் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால், மாநில அரசு அதிகாரிகள் டில்லி சென்று, தேவையான விளக்கங்கள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

