ADDED : அக் 03, 2024 11:16 PM
சென்னை:துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்ற பின், தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றனர். சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து, சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகளுடன் ஆலோசித்தனர்.
இது குறித்து, துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி தொடர்வதை உறுதி செய்ய, முதல்வர் ஸ்டாலின், சட்டசபை தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார். அக்குழு சார்பில், ஒவ்வொரு அணிகளின் பணிகளையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக, தி.மு.க., சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகளின் பணிகளை ஆய்வு செய்தோம். சுற்றுச்சூழல் அணி சார்பில், களத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தோம்.
மேலும், சுற்றுச்சூழலை காப்பதற்காக, நம் திராவிட மாடல் அரசு முன்னெடுக்கும் திட்டங்களை அறிவுத்தளத்தில் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பது பற்றி, சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் விரிவாக எடுத்துக் கூறினர்.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணியை, சுற்றுச்சூழல் அணியினர் சுற்றி சுழன்று மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கினோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.