ADDED : அக் 13, 2025 01:49 AM
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம், நாளை துவங்க உள்ள நிலையில், எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டசபை கூட்டம் ஆண்டுக்கு, 100 நாட்கள் நடத்தப்படும்' என, அக்கட்சியின் சார்பில், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நிறைவேற்ற முடியவில்லை.
இந்நிலையில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதி அடிப்படையில், நாளை சட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ளது. நாளை கூட்டம் துவங்கியதும், சமீபத்தில் மறைந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சபை ஒத்தி வைக்கப்பட உள்ளது.
அதன்பின், மறுநாள் மீண்டும் சபை கூடும். அன்று முதல் சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை, 11:00 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.