ADDED : ஜன 25, 2024 05:27 AM

சென்னை : கடந்தாண்டு துவங்கிய தமிழக சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் ரவி உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் துவங்குவது வழக்கம். அதன்படி 2023 ஜன., 9 ம்தேதி சட்டசபை கூட்டம் நடந்தது. இதில் அரசு அச்சிட்டு தந்த உரையுடன் சில வார்த்தைகளை கவர்னர் ரவி சேர்த்து பேசியதால், சர்ச்சை எழுந்தது. சபையில் இருந்து பாதிலேயே கவர்னர் வெளியேறினார்.
இதையடுத்து, கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடர், பிப்., மாதம் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, கடந்தாண்டு துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரை கவர்னர் முடித்து வைப்பதாக அறிவிக்கவேண்டும். புத்தாண்டு துவங்கியும், கவர்னரிடம் இருந்து அறிவிப்பு எதுவும் இல்லை. இந்நிலையில், 2023ல் துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக கவர்னர் ரவி நேற்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்த விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டு முதல் கூட்டத்தை கூட்டுவதற்கு கவர்னரின் ஒப்புதல் பெறவேண்டும்.