ADDED : ஆக 05, 2026 10:58 PM
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்க உள்ளதாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று, 2026- - 2027ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியான மானிய கோரிக்கை விவாதங்களை, எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்ய, சபாநாயகர் பிரபாகர் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது.
அதில், வரும் செப்டம்பர் 8ம் தேதி வரை, பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படஉள்ளது.
நாளை, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்.
ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். 12ம் தேதி விவாதங்களுக்கு பதிலளித்து, நிதியமைச்சர் மரிய வில்சன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பேசுவர்.
வரும் 13 முதல் 16 வரை சட்டசபைக்கு விடுமுறை; 17 முதல், செப்டம்பர் 8ம் தேதி வரை, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, ஓட்டெடுப்பு நடக்கும்.
இதில், முதலாவதாக, வருவாய் துறை மானியக் கோரிக்கையை, அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்கிறார். அதன் மீது அன்று விவாதம் நடக்கிறது.
வரும் 24ல், முதல்வர் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. செப்., 7, 8 ஆகிய தேதிகளில், காவல், உள்துறை, தீயணைப்பு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு, முதல்வர் விஜய் பதிலளிக்கிறார்.
மொத்தம் 21 நாட்கள் சட்டசபை கூட்டம் நடக்கவுள்ளதாக, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
