ADDED : ஆக 24, 2025 02:15 AM

புதுடில்லி:அகில இந்திய சட்டசபை சபாநாயகர் இரண்டு நாள் மாநாடு, டில்லி சட்டசபையில் இன்று துவங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைக்கும் இந்த மாநாட்டில், 29 மாநிலங்களின் சட்டசபை சபாநாயகர்கள் மற்றும் ஆறு மாநிலங்களின் மேலவை களின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, டில்லி சட்ட சபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறியதாவது:
மத்திய சட்டசபையின் முதல் இந்திய சபாநாயகராக விட்டல்பாய் படேல் 1925ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், அகில இந்திய அளவில், சட்டசபை சபாநாயகர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டை டில்லி சட்டசபை நடத்துகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாநாட்டை துவக்கி வைத்து, கண்காட்சியையும் திறந்து வைக்கிறார். நாடு முழுதும் 29 மாநில சட்டசபை சபாநாயகர்கள், ஆறு மாநில மேலவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரையுடன் மாநாடு நாளை நிறைவடைகிறது.
ராஜ்யசபா தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
இந்த மாநாட்டில், 'விட்டல்பாய் படேல்: இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை வடிவமைப்பதில் பங்கு' என்ற தலைப்பில் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், 'இந்தியா - ஜனநாயகத்தின் தாய்' என்ற தலைப்பில் பேசுகிறார்.
மூன்றாவது அமர்வில், 'சுதந்திர இயக்கம் மற்றும் சமூக சீர்திருத்தங்களில் சுதந்திரத்துக்கு முந்தைய மத்திய சட்டமன்றங்களில் தேசிய தலைவர்களின் பங்கு' என்ற தலைப்பில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், 'ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் வெளிப்படைத்தன்மை: நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நம்பிக்கையை உறுதி செய்தல்' என்ற தலைப்பில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் பேசுகின்றனர்.
சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலிருந்து நவீன குடியரசு வரையிலான நம் நாட்டின் சட்டமன்ற மற்றும் ஜனநாயகப் பயணத்தை விவரிக்கும் சிறப்பு ஆவணப்படம் திரையிடப்படுகிறது. சாகித்ய கலா பரிஷத் குழுவினர் கலாசார நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.