மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் உதவி செயற்பொறியாளர்!
மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் உதவி செயற்பொறியாளர்!
ADDED : பிப் 18, 2025 08:49 AM

திருச்சி: திருச்சியில், 'இன்டோர் பேட்மின்டன்' மைதானத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கான்ட்ராக்டர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, கே.கே.நகரைச் சேர்ந்த சீனிவாசன், அதே பகுதியில் இன்டோர் பேட்மின்டன் மைதானம் அமைக்க, மும்முனை மின்சார வசதி கேட்டு கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பரிசீலித்த உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், 58, அவரிடம் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
தர விரும்பாத சீனிவாசன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மணிகண்டனிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மதியம், கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில், சீனிவாசன் லஞ்சப்பணத்தை, காண்ட்ராக்டர் கிருஷ்ணமூர்த்தி, 34, வாயிலாக பெற்ற போது, சந்திரசேகரை லஞ்சப்பணத்துடன் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணமூர்த்தியும் கைது செய்யப்பட்டார்.