வணிகர் தினம் பெயரில் கட்டாய வசூல்; கட்சிகளுக்கு 'டப்' கொடுக்கும் சங்கங்கள்
வணிகர் தினம் பெயரில் கட்டாய வசூல்; கட்சிகளுக்கு 'டப்' கொடுக்கும் சங்கங்கள்
ADDED : ஏப் 24, 2025 02:12 AM

சென்னை: அடுத்த மாதம், 5ம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு மாநாடு நடத்துவதாக கூறி, வணிகர் சங்கங்கள் பெயரில் சிலர், லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் உள்ளனர். ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்வோர், ஜி.எஸ்.டி., பதிவு செய்வது கட்டாயம். அதன்படி, தமிழகத்தில், 11.50 லட்சம் வணிகர்கள் ஜி.எஸ்.டி., பதிவு செய்து உள்ளனர்.
அடுத்த மாதம், 5ம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக, வணிகர்களிடம் இருந்து, வணிகர் சங்கங்களின் பெயரில், சிலர் கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, வணிகர்கள் கூறியதாவது:
தற்போது, பல சங்கங்கள் உள்ளன. வணிகர்கள் தாங்கள் விரும்பும் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்.
ஏதாவது ஒரு வணிகர் சங்கம் பெயரில் சிலர், வணிகர் தினத்தன்று பிரமாண்ட மாநாடு நடத்த இருப்பதாகவும், சிறப்பு விருந்தினர்களாக அரசியல்வாதிகளை அழைத்து வருவதாகவும், லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட இருப்பதாகவும் கூறி, 50,000 முதல், 5 லட்சம் ரூபாய் வரை நன்கொடை கேட்கின்றனர்.
பணம் தர மறுத்தால், வியாபாரத்திற்கு இடையூறு செய்வது போல, வியாபார நேரத்தில் கடை முன் கூட்டமாக சூழ்ந்து அரட்டை அடிக்கின்றனர். குறிப்பிட்ட தொகையை வசூலித்த பிறகே, கடையை விட்டு நகர்கின்றனர்.
இதற்கு முன் ரவுடிகள், அரசியல்வாதிகள் தான் கட்சி கூட்டம், தலைவர்கள் பிறந்த நாள் எனக்கூறி, வணிகர்களிடம் கட்டாய நன்கொடை வசூலிப்பர்.
தற்போது, அவர்களை விட மோசமான முறையில், வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் எனக்கூறி, பலர் கட்டாய மற்றும் அடாவடியான நன்கொடை வசூலில் ஈடுபடுகின்றனர். ஒரு கடையின் உரிமையாளர், எத்தனை சங்கங்களுக்கு நன்கொடை தர முடியும்?
இதற்கு அஞ்சியே, சென்னையில் முக்கிய வணிக பகுதிகளில் உள்ள பல மொத்த விலை கடைகளின் உரிமையாளர்கள், கடைக்கு வருவதை தவிர்த்து, உறவினர்களை, 'கல்லா'வில் அமர வைக்கின்றனர்.
ஏற்கனவே சொத்து வரி உயர்வு, வாடகை உயர்வு, 'ஆன்லைன்' வணிகம் போன்றவற்றால், வணிகர்கள் கடைகளை நடத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டியவர்களே, வணிகர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம்?
எனவே, வணிகர்களிடம் இருந்து நன்கொடை வசூலிப்பதை, வணிகர் சங்கங்கள் கைவிட வேண்டும். கட்டாய வசூலில் ஈடுபடுவோர் மீது அளிக்கப்படும் புகார் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

