அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தாமதம்; தமிழக அரசு மீது விவசாயிகள் அதிருப்தி
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தாமதம்; தமிழக அரசு மீது விவசாயிகள் அதிருப்தி
ADDED : பிப் 08, 2024 08:17 AM

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை துவக்குவதில் ஏற்பட்டு வரும் தாமதம், தமிழக அரசு மீது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி, 1,652 கோடி ரூபாய் செலவில், கடந்த, 2019., பிப்., மாதம், அ.தி.மு.க., ஆட்சியின் போது துவக்கி வைக்கப்பட்டது. மூன்று மாவட்டங்களிலும், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு, பணிகள் முழுமை பெற்றுள்ளன. இப்பணியை, 'எல் அண்ட் டி' நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். 'கடந்த, பிப்., மாதமே திட்டம், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என, அறிவிக்கப்பட்ட நிலையில், துவக்க விழா, தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருக்கிறது.' நீராதாரப் பகுதியான பவானியில் தண்ணீர் இல்லாததால், திட்டத்தை துவக்கும் எண்ணம், இப்போதைக்கு இல்லை' என, அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். இது, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு மெத்தனம்
அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறியதாவது:
கடந்த, 2019, டிச., 25ல் துவங்கிய அத்திக்கடவு திட்டப்பணி, 2021 டிச., 24ல் முடிவு பெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இடைபட்ட கொரோனா தொற்றுப் பாதிப்பு, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட இத்திட்டம், ஆட்சி மாற்றத்தின் போது, 83 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருந்ததாக, நீர்வளத்துறையினரின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், தி.மு.க., அரசு பொறுப்பேற்று, 32 மாதங்களாகிவிட்ட நிலையில் பணிகள் முழுமைப்பெற்றதாக கூறும் அதிகாரிகள், திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மெத்தனம் காட்டுகின்றனர். பவானியில் போதிய தண்ணீர் இல்லை என காரணம் கூறுகின்றனர். திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துவிட்டால், நீர் இருப்பு இருக்கும் போது, அது செயல்பாட்டுக்கு வந்துவிடும்; அதை விடுத்து, திட்டத்தை துவக்காமல் இருப்பது, ஏற்புடையதாக இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
விடுபட்ட குளங்கள்
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறியதாவது:பவானியில் போதியளவு நீர் இருந்தால் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் தடை இருக்காது. தேவையான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்ட நிலையில் நீர் வரத்துக்கேற்ப திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரம், திட்டத்தில் விடுபட்ட, 1,400 குளம், குட்டைகளை சேர்ப்பது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அரசு ஏற்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது; இதுதொடர்பாக, விவசாயிகளை திரட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

