அத்திக்கடவு-அவிநாசி நீரேற்று திட்டம் இலக்கை அடைய முடியாமல் தவிப்பு
அத்திக்கடவு-அவிநாசி நீரேற்று திட்டம் இலக்கை அடைய முடியாமல் தவிப்பு
ADDED : ஜன 23, 2025 05:52 AM

சென்னை: அத்திக்கடவு - அவிநாசி திட்ட இலக்கை அடைய முடியாமல், ஐந்து மாதங்களுக்கு மேலாக, நீர்வளத் துறையினர் தவித்து வருகின்றனர்.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் வறட்சியான பகுதியில் உள்ள 1,045 குளங்கள், குட்டைகளுக்கு நீர்எடுத்து செல்லும் அத்திகடவு-அவிநாசி திட்டம் 60ஆண்டுகால கோரிக்கையாக இருந்தது. இத்திட்டத்திற்கு 2019ம்ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான பணிகள் ஆறு ஆண்டுகளாக இழுபறியாக நடந்து வந்தது. ஒரு வழியாக பணிகள் முடிந்து, 2024ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம், அத்திகடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்து வைத்தார்.
இத்திட்டத்தின்படி, ஈரோடு மாவட்டத்தில் பவானியும், காவிரியும் இணையும் இடத்திற்கு அருகேயுள்ள காலிங்கராயன் அணைகட்டில் இருந்து உபரிநீர் எடுக்கப்பட்டு, மூன்று மாவட்டங்களில் உள்ள வறட்சியான ஏரிகளுக்கு அனுப்பபட்டு வருகிறது. இதற்காக, 1,065 கி.மீ.,க்கு நிலத்தடியில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இரும்பு குழாய்கள் மட்டுமின்றி எச்.டி.பி.இ., குழாய்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ரயில்வே தண்டவாளம், நெடுஞ்சாலை ஆகியவற்றை கடந்து இந்த குழாய்கள் பயணிக்கிறது. பல இடங்களில், மின்சாரம், தொலைதொடர்பு கேபிள்கள் புதைக்கப்பட்ட இடத்திலும், குழாய்கள் செல்கின்றன. உள்ளூர் குடிநீர் குழாய்களும் செல்கிறது. அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளால், அடிக்கடி அத்திகடவு-அவிநாசி திட்ட நீரேற்று குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. ஐந்து மாதங்கள் ஆகியும், 1,045 ஏரிகளுக்கு முழுமையாக நீரை அனுப்பமுடியவில்லை.
இன்னும் 16 ஏரிகளை நீர் சென்று சேரவில்லை. இதனால், திட்ட இலக்கை அடைந்து வெற்றி கொண்டாட்டத்தை நடத்த முடியாமல் நீர்வளத்துறையினர் தவித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இதை அரசின் சாதனை என கூற முடியாத நிலை நீடித்து வருகிறது.

