டி.ஜி.பி., அலுவலகம் முன்பே தாக்குதல் நடக்கிறது: பழனிசாமி விமர்சனம்
டி.ஜி.பி., அலுவலகம் முன்பே தாக்குதல் நடக்கிறது: பழனிசாமி விமர்சனம்
ADDED : செப் 09, 2025 03:49 AM

பழனி : “தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசு துறையே இல்லை,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகம் முழுதும் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டத்தில், பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பழனியில் நடந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது:
தமிழகத்தில், பலர் போதைக்கு அடிமையாகி உள்ளனர். திறமை இல்லாத முதல்வரால், தமிழகம் போதை நிறைந்த மாநிலமாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். குற்றச்செயல் புரிபவர்கள் போலீசாரை பார்த்து அச்சப்படும் நிலைமை மாறி, அவர்களை கண்டு போலீசார் பயப்படும் அவலநிலை உள்ளது.
டி.ஜி.பி., அலுவலகம் முன்பே பொதுமக்கள் தாக்கப்படுகின்றனர். சட்டம் -- ஒழுங்கில், அ.தி.மு.க., ஆட்சி முன்மாதிரியாக இருந்தது. சட்டம் -- ஒழுங்கு சிறப்பாக இருந்தால், புதிய தொழிற்சாலைகள் உருவாகி வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
அ.தி.மு.க., ஆட்சியில், 17 மருத்துவக் கல்லுாரிகள், ஏழு சட்டக் கல்லுாரிகள் உட்பட ஏராளமான கல்லுாரிகள் துவங்கப்பட்டன. ஏழை மாணவர்கள், குறைந்த கல்வி கட்டணத்தில் படிக்கும் வகையில் இருந்தது.
தற்போது, தி.மு.க., ஆட்சியில், ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மாறி விட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த ஊழல்கள் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும்.
தி.மு.க., அரசு நடத்தும் முகாம்களில் பெறும் மனுக்கள் ஆற்றில் கிடக்கின்றன; இல்லாவிட்டால், டீக்கடையில் இருக்கின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., நடத்தும் மருத்துவமனையில் முறைகேடு நடந்துள்ளது. ஆனால், அந்த மருத்துவமனை உரிமையாளர்களை கைது செய்யவில்லை. அரசு, எவ்வளவு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்பதற்கு, இந்த நிகழ்வும் ஒரு சாட்சி.
இப்படி முறைகேடுகளுக்கு மேல் முறைகேடாக, துணிச்சலுடன் செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசின் தவறுகள் அனைத்தும் பட்டியல் இடப்படுகின்றன.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், தவறுக்கு காரணமானவர்கள் ஒருவரையும் விட மாட்டோம். சட்டத்தின் துணை கொண்டு ஒவ்வொருவரையும் தண்டிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.