நெல் கொள்முதல் நிலையத்தில் தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல்
நெல் கொள்முதல் நிலையத்தில் தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல்
ADDED : ஆக 28, 2025 02:49 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே நள்ளிரவில் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை இறக்குவதை வீடியோ எடுத்த தி.மு.க., நிர்வாகியை ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த காரையூரில் கடந்த மாதம் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் திறக்கப்பட்டது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் , வியாபாரிகளின் நெல் மூட்டைகள் லாரியில் வந்திறங்கின. இதையறிந்த, விவசாயிகள் சிலர் அங்கிருந்த கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த காரையூர் தி.மு.க., கிளை செயலாளர் சுப்ரமணியன், வியாபாரிகளின் நெல் மூட்டைகள் இறக்கப்படுவதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஊழியர்கள், சுப்ரமணியனை தாக்கி, மொபைல் மற்றும் பைக் சாவியை பறித்துக்கொண்டனர்.
இப்பிரச்னை குறித்து இரவு 1:30 மணியளவில் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அங்கு வந்த பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் மற்றும் போலீசார், பைக் சாவியை மட்டும் வாங்கி சுப்ரமணியனிடம் கொடுத்துவிட்டு, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

