உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக, தி.மு.க.,வினரை நியமிக்க முயற்சி: அ.தி.மு.க., வழக்கு
உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக, தி.மு.க.,வினரை நியமிக்க முயற்சி: அ.தி.மு.க., வழக்கு
ADDED : ஜூலை 27, 2025 06:28 AM

சென்னை: தமிழக அரசின் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக, தி.மு.க.,வினரை நியமிக்க முயற்சிப்பதாக கூறி, அ.தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் தொடர்பாக, விதிகளில் திருத்தம் செய்து, 2022ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சீனிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ஆதாயம் அடையும் நோக்கில், தி.மு.க., - ஐ.டி., பிரிவை சேர்ந்தவர்களை, ஏ.பி.ஆர்.ஓ., எனும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக நியமிக்க முயற்சிப்பதாக கூறி, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், தமிழ்செல்வன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத் தேர்வு நடத்தாமல், பெயரளவில் விண்ணப்பங்களை வரவேற்று விட்டு, தி.மு.க.,வை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினரை நியமிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமானது.
இந்த நியமனத்தை அனுமதித்தால், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் தகுதியானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விதிகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனத்தை தடுக்கவும், சீனிவாச மாசிலாமணி தாக்கல் செய்த வழக்கில், என்னையும் ஒரு தரப்பாக சேர்க்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.