ADDED : செப் 06, 2025 02:11 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி தலைவராகவும் பா.ம.க., மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ள ம.க.ஸ்டாலின், நேற்று மதியம், ஆடுதுறையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தனது அறையில், கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அலுவலகத்தின் வெளியே, அவருடைய கார் டிரைவர்களான களம்பரத்தைச் சேர்ந்த இளையராஜா, அருண்குமார் ஆகியோர் இருந்தனர்.
அப்போது, முகமூடி அணிந்த நிலையில், காரில் வந்த ஏழு பேரும் சேர்ந்து, அலுவலக வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசினர். அதை, இளையராஜாவும் அருண்குமாரும் சேர்ந்து தடுக்க முயன்றனர்.
இரண்டு பேரையும் முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் இருவரும் காயமடைந்தனர்.
பின், மற்றொரு நாட்டு வெடிக்குண்டை அலுவலகத்திற்குள் வீசினர். இதில் கதவு கண்ணாடிகள், நாற்காலி, மரக் கதவுகள் சேதமடைந்தன. அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்த ம.க.ஸ்டாலின், தன்னுடைய அலுவலக அறைக்குள் இருந்த கழிவறைக்குச் சென்று பதுங்கிக் கொண்டார்.
இதனால், ஸ்டாலின் அலுவலகத்தில் இல்லை என முடிவெடுத்து, மர்ம நபர்கள் காரில் ஏறி தப்பினர்.
இந்த தகவல் வெளியே பரவியதும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் அலுவலகம் முன் திரண்டு, போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர். பின், ஆடுதுறைமெயின் ரோட்டில், டயர்களை கொளுத்திப் போட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்; இதையடுத்து, ஆடுதுறை முழுதும் கடைகள் அடைக்கப்பட்டன.
போலீசார் கூறியதாவது:
பா.ம.க., பிரமுகர் ஸ்டாலினின் தம்பியான வழக்கறிஞர் ராஜா, 2015 ஏப்ரலில் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிதீர்க்கும் வகையில் சில சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. ஆனால், கொலையாளிகள் தப்பி விட்டனர். இதில் தொடர்பில் இல்லாத மூவர் கொலை செய்யப்பட்டனர். இந்த பிரச்னையைத் தொடர்ந்து, ஸ்டாலினுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த சூழலில் தான், ஸ்டாலின் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.