UPDATED : டிச 05, 2024 12:54 PM
ADDED : டிச 05, 2024 03:24 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராராமுத்திரைக்கோட்டையில், நேற்று முன்தினம், பாபநாசம் தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார் பிரபு, வருவாய் அலுவலர் கமலி, வி.ஏ.ஓ., சுரேஷ் ஆகியோர், ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். ஜீப்பை டிரைவர் கணேஷ் ஒட்டி கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, ஜீப் மீது மோதுவது போல வந்தது; அதிகாரிகள் சிதறி ஓடினர். லாரி, அரசு ஜீப்பை சேதப்படுத்தி, வேகமாக சென்றது. அதிகாரிகள், 26 கி.மீ., பின்தொடர்ந்து, குளிச்சப்பட்டு என்ற கிராமத்தில் மடக்கி பிடித்து, அம்மாப்பேட்டை போலீசில், இரவு, 10:00 மணிக்கு மேல் ஒப்படைத்தனர்.
வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருட்டு மணல் ஏற்றி வந்த லாரியை பிடிக்கவே நாங்கள் வந்தோம் என எண்ணி, எங்கள் மீது மோதி விட்டு, லாரியுடன் தப்பினர். இதில், ஜீப்பின் ஒருபுறம் சேதமடைந்துள்ளது.
லாரியை பின் தொடர்ந்து சென்ற போது, முன்னேறி செல்ல விடாமல், அந்த வாகனத்தை ஓட்டி சென்றனர். எனினும், லாரியை விடாமல் துரத்தி சென்றோம்.
குளிச்சப்பட்டில் சாலையின் குறுக்கே மாடுகள் படுத்து இருந்தால், லாரி ஓடிக்கொண்டு இருக்கும் போதே, டிரைவர் அதிலிருந்து குதித்து, பின்னால், டூ - வீலரில் வந்தவர்களுடன் தப்பித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.