'ஆர்டர்லி' போலீசை திருப்பி அனுப்ப அதிகாரிகள் மறுப்பதாக குற்றச்சாட்டு
'ஆர்டர்லி' போலீசை திருப்பி அனுப்ப அதிகாரிகள் மறுப்பதாக குற்றச்சாட்டு
ADDED : டிச 18, 2025 03:34 AM
ச ென்னை, டிச. 18-
பொறுப்பு டி.ஜி.பி., அபய்குமார் சிங் உத்தரவிட்ட பின்னும், தங்கள் வீடுகளில் வேலை பார்க்கும், 'ஆர்டர்லி' போலீசாரை அனுப்ப, போலீஸ் அதிகாரிகள் மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், 'ஆர்டர்லி'களாக ஆயிரக்கணக்கான போலீசார், அயல் பணி என்ற அடிப்படையில் வீட்டு வேலை பார்த்து வருகின்றனர்.
எச்சரிக்கை
ஆனால், ஆர்டலி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக, அரசு மற்றும் காவல் துறை தரப்பில் கூறப்படுகின்றன. அதே நேரத்தில், பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை ருசியாக சமைக்கும் போலீஸ்காரர், மாநிலத்தில் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்தாலும், அவரை தேடிப் பிடித்து வந்து, வீட்டு வேலைக்கு அமர்த்தும் அதிகாரிகள் இப்போதும் இருக்கின்றனர்.
இப்பிரச்னைக்கு யார் தீர்வு காண்பது என்ற நிலையில், சில தினங்களுக்கு முன், தமிழக காவல் துறையின் பொறுப்பு டி.ஜி.பி., அபய்குமார் சிங், 'இந்நாள், முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் வேலை பார்க்கும் போலீசார், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அசல் பணிகளுக்கு திரும்ப வேண்டும்' என உத்தரவிட்டார்; மறுத்தால் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார்.
இந்த உத்தரவை, இந்நாள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை; தங்கள் வீடுகளில் வேலை பார்க்கும் போலீசாரை திரும்ப அனுப்ப மறுத்து விட்டனர்.
முயற்சி
இது குறித்து, ஆர்டர்லி போலீசார் கூறியதாவது:
டி.ஜி.பி., உத்தரவுக்கு பயந்து, உடனடியாக எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு செல்வதா அல்லது எங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போலீஸ் அதிகாரிகளின் பேச்சை கேட்டு, இங்கேயே இருந்து விடுவதா என தெரியவில்லை.
பணிக்கு திரும்புவதை தவிர்க்க, நாங்கள் விடுமுறையில் இருப்பது போல கணக்கு காட்டும் முயற்சியும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

