ADDED : நவ 22, 2026 08:51 PM
சென்னை: ‘அரசாணை 319ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, டிச., 13ம் தேதி, சென்னை எழும்பூரில் ஒரு லட்சம் ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், இன்று (நவ.,22) சென்னையில் அளித்த பேட்டி:
கடந்த 2023ல், அரசாணை 319 வெளியிடப்பட்டது. அதன்படி, நிறுவன வாகனங்களுக்கு, எண்ணிக்கை கட்டுப்பாடின்றி, ‘பர்மிட்’ பெற, வழிவகை செய்யப்பட்டது. இதை பயன்படுத்தி, தனியார் ஆட்டோ நிறுவனங்கள், ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை, பதிவு செய்து இயக்குகின்றன. முறையான ‘பர்மிட், லைசென்ஸ்’ உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், வடமாநில ஓட்டுனர்களை பணியில் அமர்த்துகின்றன.
இதனால், சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி, குடும்பத்தை நடத்தி வரும், சாதாரண ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம், கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அரசாணை 319ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, டிச., 13ம் தேதி, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் முன், ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரு லட்சம் பேர் பங்கேற்று, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
