UPDATED : அக் 20, 2026 06:59 PM
ADDED : அக் 20, 2026 06:56 PM
சென்னை: ‘ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை காக்க கோரி, வரும் 27-ல், தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்’ என, ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக, ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, வரும் 27ல், சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்துகிறோம்.
‘ஊபர், ஓலா’ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தொடர் நெருக்கடிகளுக்கு மத்தியில், ‘ரேபிடோ’ வருகையும், ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக மாறியுள்ளது. இவற்றுடன் இலவச பஸ் சேவையும், ஆட்டோ ஓட்டுனர்களின் குரல்வளையை நெருக்குவதாக உள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, ‘ஊபர், ஓலா மற்றும் ரேபிடோ’ சேவைகளை உடனே தடை செய்ய வேண்டும். தகுதிச் சான்றுக்கான எப்.சி., புதுப்பிக்க, 15,000 ரூபாய் அரசு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ல், காலை 10:00 மணிக்கு, சென்னையில், தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை நோக்கி பேரணி நடத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
