ADDED : மே 31, 2025 04:57 AM

சென்னை: 'ஆட்டோ மீட்டர் கட்டணம் விரைவில் மாற்றம் செய்யப்படும்' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை, தமிழக அரசு 2013-ல் மாற்றி அமைத்தது. அதன்பின், தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2022 பிப்., மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது.
அதன்படி, பல கட்ட பேச்சு நடத்திய அரசு, இன்னும் கட்டணத்தை உயர்த்தவில்லை. 12 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் அமைச்சர் சிவசங்கரை சந்தித்து, தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாஹிர் ஹுசைன், பொதுச்செயலர் வெற்றிவேல் ஆகியோர், இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
அதற்கு அமைச்சர், 'மினி பஸ்கள் இயக்கம் குறித்த இறுதிகட்ட பணிகளில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்து, அதிகாரிகளுடன் தலைமை செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்டணம் விரைவில் மாற்றப்படும்' என, உறுதி அளித்து உள்ளார்.