பாலிடெக்னிக்குகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழிகாட்டுதல் வெளியீடு
பாலிடெக்னிக்குகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழிகாட்டுதல் வெளியீடு
ADDED : டிச 14, 2025 12:35 AM
சென்னை: 'மூன்று ஆண்டுகளில், 50 சதவீத தேர்வு முடிவுகள் கொண்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்படும்' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
நாடு முழுதும் உள்ள தொழில்நுட்ப கல்லுாரிகள், ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெறுவது அவசியம். பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
பாலிடெக்னிக் கல்லுாரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற, கல்லுாரியில், 50 சதவீதம் நிரந்தர விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும்
கடந்த மூன்று ஆண்டு களில், மாணவர் சேர்க்கை, 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு, கல்வி நிறுவனத்தின் தேர்ச்சி, குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும்
மேலும், மூன்று ஆண்டுகளில், இறுதியாண்டு படிக்கும் மாணவ - மாணவியரில், 50 சதவீதம் பேர், வேலை வாய்ப்பு, தொழில், உயர் கல்வி ஆகியவற்றை தேர்வு செய்திருக்க வேண்டும்
கல்லுாரி விரிவுரையாளர்களில், 50 சதவீதம் பேர், 'ஸ்வயம்' மற்றும் தொழில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
தன்னாட்சி அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் கல்லுாரி நிறுவனங்கள் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்யும் குழுவில், மாநில அரசு பிரதிநிதி, மாநில தொழில்நுட்ப கல்வி வாரிய பிரதிநிதி, ஏ.ஐ.சி.டி.இ., பிரதிநிதி, பாட நிபுணர்கள் இடம்பெறுவர். இந்த மதிப்பீட்டில், 100க்கு, 60 மதிப்பெண்களை, கல்லுாரிகள் பெற வேண்டும்
தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்வி நிறுவனங்கள், தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடலாம். அரசு நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் பட்சத்தில், பணி நியமனம் தொடர்பான அரசின் கொள்கைகள் பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

