UPDATED : ஜன 14, 2025 11:14 PM
ADDED : ஜன 14, 2025 11:08 PM

மதுரை : மிகவும் எதிர்பார்ப்புடனும், வீரச் செறிவுடனும் துவங்கும், மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க, இந்தாண்டு, ஆச்சரியமூட்டும் வகையில், பெண்களும் மாடுகளை அழைத்து வந்திருந்தனர். நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், 16 பெண்கள், 5 திருநங்கையர், வீரத்துடன் தங்கள் காளைகளை அழைத்து வந்திருந்தனர்.
தைப்பொங்கலையொட்டி மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று, அவனியாபுரத்தில் நடந்தது. 2026 காளைகள் பங்கேற்க, முன்பதிவு செய்யப்பட்டிருந்தன; 1735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
கலெக்டர் சங்கீதா தலைமையில் விழா ஒருங்கிணைப்புக்குழு, அனைத்து சமூக பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது.
அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாடிவாசல், தடுப்புகள், விழா மேடை அமைக்கப்பட்டது. மைதானம் தென்னை நார்களால் பரப்பப்பட்டிருந்தது.
காலை 6:30 மணிக்கு கலெக்டர், 'விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்யமாட்டோம். நெறிமுறைகளை பின்பற்றுவோம். அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடுவோம்' என உறுதிமொழி வாசிக்க அதை பின்பற்றுவதாக வீரர்கள் உறுதியேற்றனர். காலை 6:35 மணிக்கு அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து, போட்டியை துவக்கி வைத்தார்.
காளைகளுக்கு, கால்நடைத் துறையினர் மருத்துவப் பரிசோதனை செய்தனர். 925 காளைகளில் தகுதி நீக்கம் செய்தது போக, மொத்தம், 10 சுற்றுகளில், 888 காளைகள் அனுமதிக்கப்பட்டன; இதில் 16 பெண்கள், 5 திருநங்கையருக்கு சொந்தமான காளைகளும் அடக்கம்.
'முடிந்தால் பிடித்துப் பார், தொட்டுப்பார்...' என, காளைகள் சீறிப் பாய்ந்தன. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபின் தகுதியான, 900 மாடு பிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இறுதிச் சுற்று போட்டி, மாலை 5:00 மணிக்கு துவங்கியது. லேசான மழை பெய்தது; அதை பொருட்படுத்தாமல் போட்டி விறுவிறுப்பாக நடந்தது.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு, தங்க நாணயம், எவர் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், பரிசுகளாக வழங்கப்பட்டன.
அமைச்சர் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.பி.,க்கள் வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.,க்கள் பூமிநாதன், வெங்கடேசன், ராஜன் செல்லப்பா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் பங்கேற்றனர். போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறை வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.
வீரர் மரணம்
மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர், நவீன்குமார், 22. மாடுபிடி வீரரான இவரின் முகம், தாடை பகுதியில் காளை முட்டியதில், காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். மற்றொரு வீரரான மதுரை தனக்கன்குளம் கண்ணன், 28, பார்வையாளர் அவனியாபுரம் சுரேஷ் உட்பட, 45 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒன்பது பேர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இன்று, பாலமேடு; நாளை அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு ந-டக்கிறது.