அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தமிழக அரசே நடத்தலாம்! உயர் நீதிமன்றம் உத்தரவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தமிழக அரசே நடத்தலாம்! உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 13, 2024 01:08 AM

மதுரை:மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை, கலெக்டர் அமைத்துள்ள ஒருங்கிணைப்புக் குழுவே நடத்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவிட்டது.
மதுரை முனியசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லுாரில் பல்வேறு சமூக பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அவனியாபுரத்தில் சிலரின் துாண்டுதலால் கலெக்டர், வருவாய் துறையினர் ஜல்லிக்கட்டு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைத்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அதுபோல மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஒருங்கிணைப்புக் குழுவை, கலெக்டர் ஜன., 8ல் அமைத்துள்ளார்; அந்த உத்தரவை உறுதி செய்கிறோம். ஆலோசனைக் குழுவை கலெக்டர் அமைக்க வேண்டும்.
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் யாரும் மக்களிடமிருந்து நன்கொடை பெற உரிமை இல்லை. விதிமீறல் தொடர்பாக ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது சட்டப்படி ஒருங்கிணைப்புக்குழு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.