சமூக வலைத்தளங்களால் தனிமை தவிர்த்தால் வளருமே நேர்மறை சிந்தனை
சமூக வலைத்தளங்களால் தனிமை தவிர்த்தால் வளருமே நேர்மறை சிந்தனை
ADDED : செப் 12, 2025 11:06 PM

க டந்த, 2003 முதல் செப்., 13ம் தேதி முதல் நேர்மறை சிந்தனை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் முதன்முதலில் இதனை தோற்றுவித்தார். இந்த நாளில் நேர்மறையாக சிந்திப்பது தான் ஒரே கொள்கை. நேர்மறையாக சிந்திப்பதால் மன அழுத்தம் குறைந்து, இதய நோயினைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தீய எண்ணங்களைத் தடுத்து, துாய எண்ணங்களால் மனதை நிரப்புங்கள். எந்த ஒரு செயல் நடப்பினும் நன்மையும் தீமையும் கலந்திருக்கும். அதில் நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு நேர்மறை சிந்தனை தினத்தை கொண்டாடலாம்.
தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களிடம் அதிகளவிலான எதிர்மறையான எண்ணங்கள் பெருகி வருகிறது. அதனை தவிர்த்து, எப்படி வெற்றியாளராக வலம் வருவது என்பது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி, மனநலப்பிரிவு, உதவிப்பேராசிரியை கலைச்செல்வி கூறியதாவது:
மாணவர்களிடம் அதிகப்படியான திறமைகள் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் மற்றவர்களிடமான இணைப்பு இல்லை. ஒவ்வொருவரும் தனித்தீவில் இருப்பது போல வாழ்கின்றனர். சமூக வலைதளங்களால் தனிமைப்பட்டு இருக்கின்றனர். பிறருடன் இணைந்து விளையாடுவது, மற்றவர்களுடன் ஒன்றாக இருப்பது, பிறரின் மனநிலையை புரிந்துகொள்ளுதல், அதன்படி நடத்தல் போன்ற பண்புகளை இழக்கின்றனர்.
சகமனிதர்களுக்கு இடையேயான தொடர்பு மேம்பட வேண்டும், மொபைல் போன் பயன்பாடு குறைய வேண்டும். தனிமையில் இருப்பதாலேயே எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. போதைப்பொருள் பயன்பாடும் இப்போது வளர்ந்து வருகிறது. அவை, மாணவர்களின் சிந்தனை முறையை மாற்றிவிடுகின்றன; அறிவுத்திறனை குறைத்துவிடுகின்றன. வளர்ச்சிக்கு தடை போடும் போதைப்பொருள் மற்றும் சமூக வலைதளங்கள் பார்ப்பதை குறைத்துவிட்டு, குடும்பத்துடனும் சகமனிதரிடமும் நேரம் செலவிட வேண்டும். அப்படி செய்தால் நேர்மறை சிந்தனை நன்றாக வளரும். இவ்வாறு அவர் கூறினார்.
--- இன்று (செப்., 13) நேர்மறை சிந்தனை தினம்

