அரசின் நடவடிக்கையால் சென்னையில் பெரும் பாதிப்பு தவிர்ப்பு; துணை முதல்வர் உதயநிதி
அரசின் நடவடிக்கையால் சென்னையில் பெரும் பாதிப்பு தவிர்ப்பு; துணை முதல்வர் உதயநிதி
ADDED : நவ 30, 2024 04:37 PM

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 12 இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கும் இடங்களில் வெள்ள நீரை அகற்றுவதற்காக 1700 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மதியம் 1 மணி முதல் மழையின் காரணமாக 27 மரங்கள் விழுந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் வைத்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களுக்கு உணவு வழங்க 120 சமையற் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையில் தாழ்வான பகுதிகளில் இருந்த 193 பேர் மீட்கப்பட்டு, 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் 8 ஆயிரத்து 500 பேருக்கும், மதியம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 700 பேருக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவுப்படி, 386 உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழை, வெள்ளம் மீட்பு பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
கழிவுநீர் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியில் சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சீர்செய்ய 524 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் தலைமையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை.
புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க இருப்பதால், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். புயலை எதிர்கொள்ளும் அரசுக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், எனக் கூறினார்.