ADDED : ஜன 04, 2026 02:32 AM

சென்னை: சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு, கைத்தறித் துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டினார்.
கைத்தறித் துறை சார்பில், பருத்தி மற்றும் பட்டு ரக உற்பத்தியில், சந்தை தேவைக்கு ஏற்ப புதுமையான மற்றும் கண்கவர் வடிவமைப்புகளை புகுத்தி, சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு, 'சிறந்த நெசவாளர் விருது' வழங்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 2024 - 2025ம் ஆண்டில், இவ்விருதைப் பெற எட்டு நெசவாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறந்த வடிவமைப்பாளர்கள் விருதுக்கு இருவர், இளம் வடிவமைப்பாளர் மூன்று பேருக்கு, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாராட்டு சான்றிதழ் மற்றும் 23.75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 108.90 கோடி ரூபாய் செலவில், 11 திருக்கோவில்களில் மேற்கொள்ளப்பட உள்ள 18 திட்டப் பணிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில், ஸ்ரீ பராசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்டும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், 15.30 கோடி ரூபாய் செலவில், கோவை, தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏழு திருக்கோவில்களில் முடிவுற்ற 17 பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு, தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

