ADDED : நவ 10, 2025 12:56 AM
சென்னை:'இன்று உலக தடுப்பூசிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அனைத்து தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு அவசியம்' என, குழந்தைகள் நல மருத்துவர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நோய் தடுப்பு நடவடிக்கைகளில், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், 10ம் தேதி, உலக தடுப்பூசிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தடுப்பூசிகள் தற்போதைய தலைமுறைக்கு உதவுவதுடன், எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்கின்றன. பெற்றோர், தங்கள் குழந்தைகளை கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்க, நோய் தடுப்பு அட்டவணையை தொடர்ந்து, சரியாக பின் தொடர வேண்டும்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன. கொரோனா காலத்தில், தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது போல, அனைத்து தடுப்பூசிகள் குறித்தும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஒரு குழந்தை கூட தடுப்பூசி செலுத்துவதில் இருந்து விடுபடாத வகையில், முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில், 100 சதவீதம் சாதனை படைப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

