மருத்துவ கழிவு மேலாண்மை; மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
மருத்துவ கழிவு மேலாண்மை; மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
UPDATED : ஜன 25, 2025 07:56 AM
ADDED : ஜன 25, 2025 12:14 AM

சென்னை: மருத்துவ கழிவு மேலாண்மை தொடர்பாக, பொது மக்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த திருநீர்மலையில் உள்ள ஏரிக்கரையில், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக, நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் வழக்கு பதிந்து, தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில், தீர்ப்பாயத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்துஉள்ள அறிக்கை:
குழந்தைகள், பெரியவர்களுக்கான, 'டயப்பர், சானிட்டரி நாப்கின்'கள் உள்ளிட்ட உயிரி மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற, கழிவு மேலாண்மை விதிகளின்படி, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
அபாயகரமான மருத்துவ கழிவுகளை தனியாக சேகரித்து அகற்றவும், வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதை வாரியம் கண்காணிக்கிறது. மருத்துவ கழிவு மேலாண்மை தொடர்பாக, பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வாரியம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு செய்திகளை, தமிழ், ஆங்கிலத்தில் வாரியம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. வாரியத்தின் வாயிலாக மாவட்ட அளவில், ஓராண்டில், 234 பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன.
மருத்துவ கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு, பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ கழிவுகள் பொது வெளியில், நீர்நிலைகளில் கொட்டப்படுவதை தடுக்க, அவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.