குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ; யு.ஜி.சி., அறிவுறுத்தல்
குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ; யு.ஜி.சி., அறிவுறுத்தல்
ADDED : டிச 15, 2025 02:48 AM

சென்னை: குழந்தை திருமணங்களை தடுக்க, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, பல்கலைகழக மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
குழந்தை திருமண தடை சட்டத்தின்படி, 18 வயது நிரம்பாத பெண்ணுக்கும், 21 வயது நிரம்பாத ஆணுக்கும் நடக்கும் திருமணம் தகுதியற்ற திருமணமாக கருதப்படுகிறது. இந்த திருமணங்கள் செல்லத்தக்கதல்ல.
குழந்தை திருமணம், சிறுமியருக்கு, உடல் மற்றும் மன ரீதியான அச்சுறுத்தலாக அமைகிறது. குழந்தை திருமணமே, கர்ப்ப காலத்தில் சிறுமியர் மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளன. நாடு முழுதும், குழந்தை திருமணங்களை தடுக்க தொடர் நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
எனினும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும், சில மாநிலங்களிலும், குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கல்லுாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் பல்கலை மானிய குழு கூறியுள்ளதாவது:
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, மனித உரிமை மீறல்களில், குழந்தை திருமணம் ஒரு மோசமான நிகழ்வு என்று கூறுகிறது. இதை தடுக்க, 'குழந்தை திருமணம் இல்லாத பாரதம்' எனும் இயக்கத்தை துவக்கி உள்ளது.
எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், குழந்தை திருமணங்களை தடுக்க கல்லுாரிகளில் மாணவ, மாணவியரிடம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டுரை போட்டி, விவாதம், உறுதிமொழி ஏற்பு மற்றும் சுவரொட்டிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மானிய குழு கூறியுள்ளது.

