புகையிலை பொருட்களால் ஆபத்துகடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.,தகவல்
புகையிலை பொருட்களால் ஆபத்துகடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.,தகவல்
ADDED : பிப் 18, 2024 06:39 AM
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அனைத்து டீ மற்றும் பெட்டிக்கடை உரிமையாளர்களுடன் மாதாந்திர கூட்டங்களை நடத்தி, புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் எஸ்.பி.,அறிக்கை சமர்ப்பித்தார்.
மதுரை உலகனேரி வழக்கறிஞர் சுரேஷ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மேலுார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.,) அலுவலக வளாகத்தில் ஒருவர் தனது மனைவி பெயரில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் டீக்கடை நடத்தினார். அங்கு சட்டவிரோதமாக மது, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சீல் வைத்து மூடினர். அதையும்மீறி அதே கடை முன் மது, கஞ்சா விற்பனைதொடர்கிறது. மதுரை மாவட்ட எஸ்.பி.,மேலுார் போலீசாருக்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரணையின்போது அரசு தரப்பு,' கடை பூட்டப்பட்டுஉள்ளது. எந்த வியாபாரமும் நடைபெறவில்லை,' என தெரிவித்தது.
நீதிபதிகள், 'மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. மக்களை அதிகம் பாதிக்கக்கூடியது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, பி.டி.ஓ.,அலுவலக வளாகத்தில் சட்டவிரோத மது மற்றும் குட்கா விற்பனை குறித்து எஸ்.பி.,அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு மீண்டும் விசாரித்தது. எஸ்.பி.,தாக்கல் செய்த அறிக்கை: இதுபோன்ற நிகழ்வு வரும்காலங்களில் நடைபெறக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடையை மீண்டும் துவக்க உரிமையாளருக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அனுமதியளித்துஉள்ளது. சோதனை நடத்தியதில், தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள், மதுபானங்கள் இல்லை.
சம்பந்தப்பட்ட நபருக்குஎதிராக 2018ல் வழக்கு பதியப்பட்டது. அதன்பிறகு சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக அல்லது வைத்திருந்ததாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு கேமராக்கள் உரிமையாளரால் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட காவல்துறை அனைத்து டீ மற்றும் பெட்டிக்கடை உரிமையாளர்களுடன் மாதாந்திர கூட்டங்களை நடத்தி, புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள்,'மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.