ADDED : அக் 06, 2024 06:29 AM
மகப்பேறு மற்றும் குழந்தை பிறப்பை எப்படி அணுகுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில், அரசு மகப்பேறு மருத்துவமனைகள் சார்பில், இணையதள சேவை துவக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் கீழ் செயல்படும், எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் திருவல்லிக்கேணி கஸ்துாரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனைகள் இணைந்து, www.iogkgh.org.in என்ற இணையதள சேவையை துவக்கி உள்ளன.
இச்சேவையை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் நேற்று துவக்கி வைத்தார். இந்த இணையதளத்தின் முகவரி மற்றும் எளிதாக இணைய சேவையை பயன்படுத்தும் வகையில், 'கியூ.ஆர் குறியீடு' போன்றவை, மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு தெரியும்படி ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில், பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு, கர்ப்ப கால உடல், மன ஆரோக்கியம், சுய ஒழுக்கம், உங்கள் டாக்டரை நம்புங்கள், ஆபத்து மிக்க கருத்தரிப்பு, கர்ப்பகால நீரிழிவு, இதயநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 15 தலைப்புகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மகப்பேறு டாக்டர் வித்யா கூறியதாவது:
ஒரு பெண் கருத்தரிப்பில் துவங்கி, கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு, குழந்தை பிறப்புக்கு பின் என, நீண்ட பயணத்துக்கு, இந்த இணையதள சேவை பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும். கர்ப்பிணியர் முதல் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் வரை, இந்த இணையதள சேவையை பயன்படுத்தி, அவர்களுக்கு எழும் கேள்விக்கான, பதிலை தெரிந்து கொள்ளலாம்.
மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுதல், 'ஸ்கேன்' எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், கர்ப்ப கால உடற்பயிற்சி, யோகா செய்வதன் பயன் குறித்து, புகைப்படங்கள், வீடியோக்கள், இசை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.