அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம்: சிவகாசியில் ரூ.500 கோடி பட்டாசு விற்பனை
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம்: சிவகாசியில் ரூ.500 கோடி பட்டாசு விற்பனை
ADDED : ஜன 22, 2024 05:56 AM

சிவகாசி: அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிவகாசியில் ரூ.500 கோடிக்கு பட்டாசு வியாபாரம் ஆகியதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரதமர் மோடி முயற்சியால் இன்று அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவை தீபம் ஏற்றி தீபாவளி போல் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள், மக்கள் சிவகாசி வந்து பட்டாசு வாங்கி சென்றுள்ளனர். ரூ.500 கோடிக்கு பட்டாசு வியாபாரம் ஆகி உள்ளது.
2023 நவ. ல் தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி துவங்கியது. ஆனால் சீதோஷ்ண நிலை காரணமாக 25 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. தீபாவளிக்கு தயாரிக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஓரளவிற்கு இருப்பு இருந்தன.
அயோத்தி கும்பாபிஷேகத்திற்காக வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பட்டாசு வாங்க வந்தவர்களுக்கு பற்றாக்குறை இன்றி விற்பனை செய்ய முடிந்தது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஒரே ஆண்டில் இரு தீபாவளி என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) தலைவர் கணேசன் கூறியதாவது: இந்தியா முழுவதும் இருந்து பட்டாசு வாங்கி சென்றுள்ளனர். பல மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் வழங்கி உள்ளார்கள்.
ரூ.500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை ஆகி உள்ளது. பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம். ராமர் கோயில் கும்பாபிஷேக நாளான ஜன. 22 ஐ தேசிய திருவிழாவாக அறிவித்து தீபாவளி போல ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட மத்திய அரசை கேட்டு கொள்கிறோம் என்றார்.