ராமர் கோயில் கும்பாபிஷேகம் லைவ் ஒளிபரப்ப தடையா? நிதி அமைச்சர் நிர்மலா பங்கேற்பதில் நெருக்கடி
ராமர் கோயில் கும்பாபிஷேகம் லைவ் ஒளிபரப்ப தடையா? நிதி அமைச்சர் நிர்மலா பங்கேற்பதில் நெருக்கடி
UPDATED : ஜன 22, 2024 07:08 AM
ADDED : ஜன 21, 2024 02:33 PM
காஞ்சிபுரம்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக லைவ் நிகழ்ச்சிகளை திறந்த வெளி மைதானத்தில் ஒளிபரப்ப போலீசார் தடை விதித்துள்ளதாக பா.ஜ., பிரமுகர்கள் கூறியுள்ளனர். இது போன்ற தடைகளை போடும் மாநில அரசுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக, உலகம் முழுவதும் வாழும் ஹிந்து மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் கும்பாபிஷேகத்தை தூர்தர்ஷன் டிவி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த காட்சிகள் பல்வேறு மாநிலங்களில் மெகா ஸ்கிரீனில் திரையிடப்படுகிறது.
புல்டோசர் மூலம் அகற்றம்
காஞ்சிபுரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று லைவ் பார்க்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் எஸ்.எம்.ஜி. சூர்யா மஹால் அருகில் நிகழ்ச்சிகள் காலை 8 மணி முதல் துவங்கி நடக்கும் என காஞ்சி மாநகர ஆன்மிக பேரவை அறிவித்துள்ளது. ஆனால் திறந்த வெளியில் லைவ் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என போலீசார் பா.ஜ., மாவட்ட நிர்வாகிகளிடம் எச்சரித்துள்ளனர். மேலும் ஏற்பாடு கூடாரங்கள் போலீசார் உத்தரவால் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டது.

இதற்கிடையில் , காமாட்சி அம்மன் கோயில் உள்ளேயே ஒளிபரப்பு செய்வோம் என பா.ஜ., வினர் தெரிவித்துள்ளனர் . கோயில் மட நிர்வாகிகளும் எங்கள் கோயிலில் ஏற்கனவே பெரிய அளவிலான எல்இடி திரை உள்ளது. இதில் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை நடத்துவதில் தவறு இல்லை இருப்பினும் மடத்தின் டிரஸ்ட் உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம் என தெரிவித்துள்ளனர்.
நிதி அமைச்சர் வரும் போது அதற்கென பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது போலீசாரின் கடமை, எனவே உரிய அனுமதி பெற வேண்டும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
இது தொடர்பாக ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.
முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பதில்
இதற்கு பதிலளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன், தனது ‛எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சேகர்பாபுவின் பதிவுக்கு பதில் கொடுக்கும் வகையிலே தரவுடன் ஆதாரத்துடன் மக்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். ஹிந்துக்களின் வழிபாட்டு முறையில் மாற்றி மாற்றி இடையூறுகளை ஏற்படுத்துவதை தமிழகம் முழுவதில் இருந்தும் வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கடமை உங்களுடையது. மேலும் சின்ன சின்ன தனியார் கோயிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும் போலீசார் அங்கேயிருந்து அநாவசிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலைய துறை அமைச்சராக நீங்கள் முன்நின்று காப்பற்ற வேண்டும். தடையில்லையேல், உங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிடுங்கள். இவ்வாறு அந்த பதிவில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

