வேன் – ஆம்னி பஸ் மோதல் அய்யப்ப பக்தர், டிரைவர் பலி
வேன் – ஆம்னி பஸ் மோதல் அய்யப்ப பக்தர், டிரைவர் பலி
ADDED : நவ 23, 2026 07:04 PM

மயிலம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஆம்னி பஸ், வேன் மீது மோதியதில், அய்யப்ப பக்தர் உட்பட இருவர் உயிரிழந்தனர்; 13 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி, ஆம்னி பஸ் இன்று (நவ.,23) அதிகாலை வந்து கொண்டிருந்தது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மயிலம் அடுத்த கன்னிகாபுரம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னே சென்று கொண்டிருந்த பார்சல் லாரி மீது மோதியது.
தொடர்ந்து, சாலையின் இடது பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சபரிமலையில் இருந்து திரும்பிய அய்யப்ப பக்தர்களின் டூரிஸ்ட் வேன் மற்றும் சாலையோர ஓட்டலுக்குள் மோதி நின்றது.
இந்த விபத்தில், அய்யப்ப பக்தர்கள் வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில், டிரைவர் மற்றும் வேனில் வந்த திருவள்ளூர் மாவட்டம், வரதபாளையத்தை சேர்ந்த 14 பக்தர்கள் என, 15 பேர் படுகாயமடைந்தனர்.
வேன் டிரைவரான திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ராஜேந்திரன், 24, அய்யப்ப பக்தரான வரதபாளையத்தைச் சேர்ந்த லட்சுமிபதி, 33, ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 13 பேர் மயிலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
