பி.எட்., கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு
பி.எட்., கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு
UPDATED : ஆக 24, 2011 01:20 AM
ADDED : ஆக 24, 2011 12:31 AM
சென்னை : பி.எட்., எம்.எட்., உட்பட, ஆசிரியர் படிப்புகளைக் கொண்ட தனியார் கல்லூரிகளில், மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில், எட்டுப் பேர் அடங்கிய குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, அரசு வெளியிட்ட உத்தரவு: சுயநிதி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், அதிகக் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் கட்டணத்தை முறைப்படுத்த, சுயநிதி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு, கட்டணத்தை நிர்ணயிக்குமாறு தமிழக அரசை, இந்திய நிவாரண கவுன்சில் கேட்டுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து, பி.எட்.,-எம்.எட்- பி.பி.எட்.,-எம்.பி.எட்., போன்ற ஆசிரியர் பயிற்சி பட்டப் படிப்புகளையும், பட்டயப் படிப்புகளையும் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளுக்கு, கட்டணத்தை நிர்ணயிக்க தனி குழு அமைக்குமாறு தமிழக அரசை, சுயநிதி தொழில் கல்வி கட்டண நிர்ணயக் குழு தலைவர் கேட்டுக்கொண்டார். இதன்பேரில், ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில், எட்டுப் பேர் அடங்கிய குழுவை அமைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் ஒவ்வொன்றும், தாங்கள் வசூலிக்க இருக்கும் கட்டண விவரங்களை, இக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இக்குழு, கல்லூரிகளின் கட்டண விவரங்களை ஆய்வு செய்து, கட்டணம் நியாயமானது தானா அல்லது அதிகமானதா என்பதை முடிவு செய்யும். கட்டணம் அதிகம் எனக் கருதினால், அதை மாற்றியமைக்குமாறு இக்குழு பரிந்துரைக்கும்.
இக்குழு நிர்ணயிக்கும் கட்டணம், மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும். அதன் பின், கட்டணத்தை மாற்றியமைக்க கல்லூரி விரும்பினால், இக்குழுவிடம் விண்ணப்பிக்கலாம். இக்குழு, கட்டணம் நிர்ணயித்த பின், அதற்கு அதிகமாக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வகையிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலிப்பது நன்கொடை வசூலிப்பதற்கு ஒப்பாகும். இவ்வாறு, அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு விவரம்
தலைவரைத் தவிர்த்து, உயர் கல்வித் துறைச் செயலர், நிதிச் செயலர் அல்லது அவரது பிரதிநிதி, பள்ளிக் கல்வி என்.எஸ்.எஸ்., இணை இயக்குனர், அரசால் நியமிக்கப்படும் கணக்காளர், 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' பேராசிரியர் சண்முகம், தருமபுரி வருவான் வடிவேலன் பி.எட்., கல்லூரி தாளாளர் வடிவேலன், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.