ADDED : ஜூலை 12, 2011 12:38 AM

புதுடில்லி : 'டில்லியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை கலைக்கச் செய்தது, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான்' என, ராம்தேவ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கோரி, யோகா குரு பாபா ராம்தேவ், ஜூன் 4ல், டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். ஆனால், அன்றைய தினம் இரவு அங்கு சென்ற போலீசார், ராம்தேவின் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். ராம்தேவும் டில்லியை விட்டு வெளியேற்றப்பட்டதோடு, அவர் இரண்டு வார காலத்துக்கு டில்லிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.
உண்ணாவிரத பந்தலுக்குள், போலீசார் நடத்திய தடியடி சம்பவங்களை, 'டிவி' சேனல்களில் பார்த்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தானாக இந்த வழக்கு குறித்து விசாரித்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கும், டில்லி போலீசுக்கும் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. ராம்தேவின் பாரத் சுவாபிமான் அறக்கட்டளைக்கு நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும் படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
ராம்தேவ் தரப்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதாடினார். ''பிரச்னைக்குரிய நபரோ அல்லது குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட நபரோ ஒரு இடத்தில் இருந்தால், அவரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், ராம்தேவ் மீது எந்த குற்றப்பின்னணியும் இல்லை.
அப்படி இருக்கும் போது, நள்ளிரவில், அவர் உண்ணாவிரதம் இருந்த பந்தலுக்குள் சென்ற போலீசார், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் என்ன?
''இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளதாக ராம்தேவ் கூறுகிறார். எனவே, இதற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதிலளிக்க வேண்டும்'' என, ராம்ஜெத்மலானி வாதாடினார்.
ஜெத்மலானியின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது குறித்து விளக்கம் அளிக்கும் படி, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயிடம் கேட்டனர். இதுமாதிரியான சமயங்களில் சட்ட அமலாக்கத்துறை மவுனம் சாதிக்கக்கூடாது என, அவர்கள் தெரிவித்தனர்.
தங்கள் மீது தடியடி நடத்திய நிர்வாகத்தினர் குறித்து ராம் தேவ் ஆதரவாளர்கள் கொடுத்த புகாருக்கு போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை. இது குறித்து போலீஸ் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
''போலீசாரிடம் இருந்து உரிய பதில் கிடைத்ததும் இது தொடர்பாக விசாரணை வைத்து கொள்ளலாம்'' எனக் கூறி, இந்த விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.