திருப்பூரில் தயாராகும் குழந்தை ஆடைகள் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பு
திருப்பூரில் தயாராகும் குழந்தை ஆடைகள் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பு
ADDED : செப் 22, 2025 02:10 AM

திருப்பூர்:திருப்பூரில் உற்பத்தியாகும் குழந்தை ஆடைகளுக்கு, அமெரிக்காவை தொடர்ந்து, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளிலும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கிய ஆடைகள் மற்றும் உற்பத்தி பொருட்களையே, வளர்ந்த நாடுகள் விரும்புகின்றன.
ஐரோப்பிய நாடுகளில், வரும் 2027ம் ஆண்டுக்கு பின், 50 சதவீத இறக்குமதி ஆடைகள், மறுசுழற்சி மற்றும் பசுமை சார் உற்பத்தி ஆடைகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின், பசுமை சார் ஆடைகள் எதிர்பார்ப்பை, இந்தியா மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக, குழந்தைகளுக்கான ஆடைகளை, இந்தியாவில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்ய, வளர்ந்த நாடுகள் விரும்புகின்றன.
அமெரிக்காவை தொடர்ந்து, பச்சிளம் குழந்தைகள், சிறுவர் -சிறுமியருக்கான ஆடைகளை, இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்ய பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன.
இதன் எதிரொலியாக, திருப்பூரில் நடந்த 'நிட்பேர்' கண்காட்சியில், ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்கள், குழந்தைகளுக்கான ஆடை வர்த்தகம் குறித்து அதிக விசாரணை நடத்தியுள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'பருத்தி நுாலிழையில் தயாரித்த, மதிப்புக்கூட்டப்பட்ட குழந்தைகள் ஆடைகள், குளிர், கோடை என, எந்த பருவகாலமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
'கம்பளி கலப்பின நுால்களையும் இணைத்து, குழந்தைகக்கான ஆடை உற்பத்தி செய்வதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. விலை அதிகமாக இருந்தாலும், உயர்தர குழந்தை ஆடைகளையே விரும்புகின்றனர்.
சமீபத்தில், குழந்தைகளுக்கான ஆடை கொள்முதல் அதிகரித்துள்ளது. சில ஏற்றுமதி நிறுவனங்கள், குழந்தை ஆடை உற்பத்தியில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி வருகின்றன,' என்றனர்.