சிதம்பரம் கோவில் நிலம் மீட்க கடலுார் கலெக்டருக்கு கெடு
சிதம்பரம் கோவில் நிலம் மீட்க கடலுார் கலெக்டருக்கு கெடு
ADDED : அக் 06, 2024 01:27 AM

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் நிலங்களை மீட்க, கடலுார் மற்றும் காரைக்கால் மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:
சிதம்பரம் நடராஜர் கோவிலை, பொது தீட்சிதர் சபா நிர்வகிக்கிறது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலுார், சேலம், திருநெல்வேலி, புதுச்சேரியில் உள்ள காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், இந்த கோவிலுக்கு சொந்தமாக, 3,000 ஏக்கருக்கு மேலான நிலம் உள்ளது.
மோசமான நிர்வாகத்தால், கோவில் சொத்துக்கள் விரையமாகி விட்டன. கோவில் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, கடலுார் கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் மருதாச்சலமூர்த்தி ஆஜரானார். கடலுார் மற்றும் காரைக்கால் கலெக்டர்கள், விழுப்புரத்தில் உள்ள அறநிலையத் துறை இணை ஆணையர் உரிய விசாரணை நடத்தி, கோவில் சொத்துக்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், 12 வாரங்களில் இந்த நடவடிக்கைகளை முடிக்கும்படியும், நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுஉள்ளார்.