ஜாதி பாகுபாட்டால் அரசு பஸ் இயக்கப்படுவதில்லை பகீர் புகார்
ஜாதி பாகுபாட்டால் அரசு பஸ் இயக்கப்படுவதில்லை பகீர் புகார்
ADDED : ஆக 23, 2025 01:45 AM
தொண்டாமுத்தூர்:கெம்பனூர், அண்ணா நகரில், ஜாதி பாகுபாட்டால், அரசு பஸ் தங்கள் பகுதிக்கு இயக்கப்படுவதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், கெம்பனூர் கிராமத்தில், தொண்டாமுத்தூர் பேரூராட்சியின், மூன்றாவது மற்றும் நான்காவது வார்டு பகுதிகள் உள்ளன.
இதில், மூன்றாவது வார்டில், கெம்பனூர் தெற்கு மற்றும் வடக்கு வீதி பகுதி உள்ளது. இங்கு, 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் மட்டுமே அதிகமாக உள்ளனர்.
நான்காவது வார்டில், அண்ணா நகர் வடக்கு, தெற்கு வீதி உள்ளது. இப்பகுதியில், அருந்ததியர் சமுதாய மக்கள், 200 குடும்பத்தினர் உள்ளனர். இந்த கிராமத்திற்கு, 21, 21பி, 94ஏ, 64டி என்ற வழித்தடம் எண் கொண்ட நான்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில், 21 என்ற வழித்தடம் எண் கொண்ட அரசு பஸ் மட்டும், ஜாதி பாகுபாடு காரணமாக, தங்கள் பகுதிக்கு வராமல், கெம்பனூர் ஊருக்குள்ளேயே திரும்பி செல்வதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பலமுறை போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஜாதி பாகுபாட்டால் தடுக்கப்பட்ட பஸ்சை, மீண்டும் எங்கள் பகுதியில் இயக்க வேண்டும்' என்றனர்.