ADDED : டிச 07, 2024 01:53 AM
சென்னை: நடிகை கவுதமி புகாரின் அடிப்படையில், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் சங்கர் என்பவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பிரபல நடிகை கவுதமி, தமிழகத்தில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.
இதில், ஒரு சில சொத்துக்களை விற்பனை செய்ய, சினிமா தயாரிப்பாளர் அழகப்பனை, பொது அதிகார முகவராக நியமித்தார். அவர் முறைகேடு செய்து விட்டதாக, பின்னர் போலீசில் கவுதமி புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அழகப்பன், நாச்சாள், அவர்களது மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் பாஸ்கர், ரமேஷ் சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.
இதில், ரமேஷ் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'விசாரணை அதிகாரியான சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முன், நான்கு வாரத்துக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்பது உட்பட நிபந்தனைகளை விதித்து, ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.