UPDATED : நவ 28, 2026 09:38 PM
ADDED : நவ 28, 2026 09:36 PM
சென்னை: தற்கொலையை தடுக்க, 'பாராகுவாட் டைகுளோரைடு' களைக்கொல்லி மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வயல்களில் களைகளை அழிப்பதற்காக, ‘பாராகுவாட் டைகுவோரைடு’ எனும் களைக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுதும் ஆண்டுதோறும், 15 லட்சம் டன் பயன்படுத்தபட்டு வருகிறது. இந்த மருந்தை குடித்து, ஆண்டுக்கு 17,000 பேர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இந்த களைக்கொல்லி மருந்துக்கு, மத்திய வேளாண்மை அமைச்சகம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் தடை விதித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த மருந்தின் உற்பத்தி, இறக்குமதி, போக்குவரத்து, வினியோகம், விற்பனை, பயன்பாடு அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
