பத்திரப்பதிவுக்கு தடை விதிப்பு: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
பத்திரப்பதிவுக்கு தடை விதிப்பு: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : அக் 10, 2025 07:10 AM

திருப்பூர்: கோவில் நிலங்கள் என்ற பெயரில், பத்திரப் பதிவுக்கு தடை விதிக்கும் அறநிலையத்துறையின் அதிகாரத்தை பறித்து, சிறப்பு குழு பரிந்துரைக்க வேண்டும் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்றுள்ள இனாம் நில விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், இதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பல பகுதிகளில் விவசாய நிலங்களை கோவில் நிலங்களாகவும்; அவை இனாம் நில ஒழிப்பு சட்டத்தில் ரயாத்வாரி நிலங்களாகவும் கண்டறியப்பட்டு வரும் விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ளது. அறநிலையத் துறை கடிதம் வழங்குவதை தொடர்ந்து, பதிவுத்துறை, இதுபோன்ற நிலங்கள் மீது பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரயாத்வாரி பட்டா நிலங்களாக தீர்வு காணப்பட்ட நிலங்களைப் பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குவது, அதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து கடந்த ஆகஸ்டில், தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. அதனடிப்படையில், அரசு தலைமைச் செயலர் தலைமையில் ஒரு உயரதிகாரக் குழு அமைக்கப்பட்டது.
குழுவில், வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலர், அறநிலைய துறை செயலர் மற்றும் துறைத் தலைவர், நில நிர்வாக ஆணையர், பதிவு துறை தலைவர், நில அளவை மற்றும் தீர்வு இயக்குநர், சட்டத் துறையின் செயலர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, இனாம் நில விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி கூறியதாவது:
இனிமேல் எதிர்காலத்தில் பத்திரப்பதிவைத் தடுப்பது அல்லது தடை விதிப்பது போன்றவை, இக்குழுவின் ஒப்புதல் இன்றி மேற்கொள்ளக் கூடாது. இது குறித்த அனைத்து கோரிக்கைகளும் இந்த சிறப்புக்குழுவின் முன் வைக்கப்பட வேண்டும். குழு பரிந்துரைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, 2007ம் ஆண்டுக்கு முன்பிருந்த உத்தரவுகளுக்கும் பொருந்தும் வகையில் திருத்தப்பட வேண்டும். இல்லாவிடில், இந்த அரசாணையும், உயர் அதிகார குழுவும் வெறும் கண் துடைப்பு என்று தான் கூற முடியும். இதனால் எந்தப்பயனும் இல்லை. நிலம் குறித்த உரிமையை முடிவு செய்வதில், வருவாய் துறைக்குத் தான் முழு அதிகாரம் உள்ளது. இப்பிரச்னையில் வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வருங்காலத்துக்கும் பயன்படும் வகையிலான நடவடிக்கை தான் அவசியம். அரசு அதற்கான நடவடிக்கையை துவங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.