வங்கி ஆவணங்கள் கேட்டு வழக்கு: செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவு
வங்கி ஆவணங்கள் கேட்டு வழக்கு: செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவு
ADDED : ஏப் 18, 2024 05:29 AM

சென்னை : சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பெறுவதற்காக, வரும் 22ல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார்.
செந்தில் பாலாஜி சார்பில் டில்லி மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், வழக்கறிஞர் மா.கவுதமன், அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி, செந்தில் பாலாஜி தரப்பில், மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'நாங்கள் கோரிய ஒரு சில வங்கி ஆவணங்களை வழங்கும்படி, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. கோரிய ஆவணங்கள் கிடைத்ததும், அதன்படி வாதிட அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்' என கூறப்பட்டது.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி, மீண்டும் வாதங்களை முன்வைக்க, செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து நேற்று உத்தரவிட்டார்.
அதையடுத்து, 'வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத் துறை தங்களுக்கு வழங்கிய வங்கி சார்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளதால், வங்கி வசமுள்ள ஆவணங்களையும் வழங்க வேண்டும்' என, செந்தில் பாலாஜி தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தையும் பெற உரிமையுள்ளது என்றும், அதை நீதிமன்றமே வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
வங்கி ஆவணங்களை பெற்று கொள்ள, செந்தில் பாலாஜியை வரும் 22ல் பிற்பகல் நேரில் ஆஜர்படுத்தும்படி, சிறைத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் வரை, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார்.

