200 ஆண்டுகள் பழமையான கோவில் ஆலமரம் விழுந்தது; பக்தர்கள் வேதனை
200 ஆண்டுகள் பழமையான கோவில் ஆலமரம் விழுந்தது; பக்தர்கள் வேதனை
ADDED : ஏப் 01, 2025 07:42 AM

சிவகங்கை: தல்லாக்குளம் தர்ம முனீஸ்வரர் கோவிலில் உள்ள 200 ஆண்டு பழமையான ஆலமரம் விழுந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் நடுவே தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இருந்தது. இது தான் இந்த கோவிலின் சிறப்பு.
இந்த கோவிலுக்கு வரும் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவல் தெய்வமாக ஆலமரத்தை வழிபட்டு செல்வார்கள். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கும்போது இந்த மரத்தை எடுக்க முயன்ற போது ஏராளமான தடைகள் ஏற்பட்டது. பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்ற முயன்ற போது இயந்திரம் சேதமானது.
பின்னர் மரத்தை அகற்றாமல் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதி மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த இந்த ஆலமரம் நள்ளிரவில், இரண்டாக பிளந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். தற்போது சாலையில் மரத்தை அகற்றி போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.
வயது முதிர்வு காரணமாக மரம் விழுந்துள்ளது என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பரிகார பூஜைகள் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் வரும் ஏப்ரல் 6ம் தேதி வருஷாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

